ஐந்தாவது ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கக் கல்வி குழுக் கூட்டம் 29.01.2020 அன்று பேராசிரியர் (முனைவர்) சுக. பெலிக்ஸ், துணைவேந்தர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெளியிடத்து வல்லுனர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்த உறுப்பினர்களையும், சிறப்பு அழைப்பாளர்களையும் முனைவர் மா.ராஜகுமார், விரிவாக்கக் கல்வி இயக்குநர் வரவேற்றுப் பேசினார். அதன் பின்னர் தலைமையுரையாற்றிய அவைத்தலைவர் பேராசிரியர் சுக.பெலிக்ஸ் விரிவாக்கக் கல்விக்குழு கூட்டத்தின் முக்கியத்துவத்தையும் நமது பல்கலைக்கழகத்தின் விரிவாக்கப் பணிகளை மேம்படுத்துவதன் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார். சமுதாய மக்களுக்கு பட்டப்படிப்பு மட்டுமன்றி அவர்களுக்கு தேவையான பட்டய கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் மீன்வளத்துறையில் உள்ள பங்குதாரர்களுக்கு தொழில்நுட்பங்களை இப்பல்கலைக்கழகம் தொடர்ந்து வழங்கி வருகிறது என்று தெரிவித்தார். தலைமையுரையைத் தொடர்ந்து விரிவாக்கக் கல்வி இயக்குநர் முனைவர் மா. ராஜகுமார் நான்காவது விரிவாக்கக் கல்விக்குழு கூட்டத்தின் செயல்குறிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தார். அதன் பின்னர் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு நிலையங்களில் நடைபெற்றுள்ள விரிவாக்கப்பணி அறிக்கையை விரிவாக்கக் கல்வி இயக்குநர், அனைத்து கல்லூரி முதல்வர்கள், மைய இயக்குனர்கள் மற்றும் திட்ட ஒருங்கிணையாளர் ஆகியோர் சமர்ப்பித்தனர். எதிர்கால விரிவாக்க பணிகள் குறித்த ஆலோசனைகள் பெறப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 32 தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய தொழில்நுட்ப கையேடு வெளியிடப்பட்டது. அதன் பிரதிகளை திரு. சிதம்பரம் (செல்லம் ஏஜென்சி, நாகப்பட்டினம்) மற்றும் திரு.அமல்சேவியர், மீன்வளத்துறை மண்டல இணை இயக்குனர் பெற்றுக் கொண்டனர்.